உள்ளூர் செய்திகள்

செங்கம் அருகே கள்ளக்காதல் தகராறில் தாய்-மகள் கொலை: விவசாயி கைது

Published On 2022-12-05 10:54 GMT   |   Update On 2022-12-05 10:54 GMT
  • காமராஜுக்கும், பரிமளாவுக்கும் மீண்டும் கள்ளத்தொடர்பு சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
  • தாய், மகளின் கதறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்றனர். அதற்குள் காமராஜ் தப்பி ஓடிவிட்டார்.

செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா (வயது 46). இவரது கணவர் துரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

பரிமளா தனது மகன் லோகேஷ் மகள்கள் ராஜேஸ்வரி (16) ரோகிணி ஆகியோருடன் வசித்து வந்தார்.

பரிமளா, வீரானந்தல் அருகே உள்ள அடிவாரம் கிராமத்திற்கு விவசாய வேலைக்கும், காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்கும் சென்று வந்தார். அப்போது அடிவாரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காமராஜ் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பரிமளா, 'எனது மகள்கள் வளர்ந்துவிட்டனர். நம்முடைய பழக்கத்தை நிறுத்திக்கொள்ளலாம்' என்று காமராஜிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், பரிமளாவும், அவரது 2-வது மகள் ராஜேஷ்வரி (16) இருவரும் அடிவாரம் பகுதியில் உள்ள காட்டிற்கு நேற்று விறகு வெட்ட சென்றனர்.

அப்போது, அங்கிருந்த காமராஜுக்கும், பரிமளாவுக்கும் மீண்டும் கள்ளத்தொடர்பு சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த காமராஜ், தான் வைத்திருந்த கத்தியால், பரிமளாவின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரி வெட்டினார்.

இதை பார்த்து அலறி கூச்சலிட்ட பரிமளாவின் மகள் ராஜேஷ்வரி தாயை காப்பாற்ற முயன்றார். அவரையும் காமராஜ் வெட்டினார்.

தாய், மகளின் கதறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்றனர். அதற்குள் காமராஜ் தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பரிமளா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புதுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜேஷ்வரியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேஷ்வரி வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இருவரது உடலையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியில் பதுங்கியிருந்த காமராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News