உள்ளூர் செய்திகள்
உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை- அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
பாகூரில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சிலம்பம் மற்றும் அடிமுறை கழகம் சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் நடைபெற்றது.
இப்போட்டியை, புதுவை போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம், கிராம பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் குமாரசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மினி சப்-ஜூனியர், சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர் என்ற பிரிவுகளில் நடந்த போட்டியில், புதுவையின் பல்வேறு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்ளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இதில் பா.ஜனதா பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான ருத்ரமூர்த்தி வரவேற்றார். மூத்த பயிற்சியாளர் திராசு கணபதி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுவையில் விளையாட்டு துறை, கல்வி துறையுடன் இணைந்துதான் செயல் படுகிறது. அதனை கல்விதுறையில் இருந்து பிரித்து, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு என்ற தனி துறையாக அமைக்கப்பட வேண்டும் என முதல்- அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அவரும் அதனை ஏற்றுக் கொண்டார்.
அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மினி விளையாட்டு அரங்கம், மற்றும் கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு திடல்களை மேம்படுத்திட வேண்டும் என மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தேன். அதற்காக, அவர் ரூ.10 கோடி நிதி ஒதுக்கி தருவதாக தெரிவித்துள்ளார்.
புதுவையில் உலகதரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் உருவாக்க வேண்டும் என்பது எண்ணம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வீரர்களுக்கான நிலுவையில் உள்ள ஊக்க தொகையை வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முன்னாள் கவுன்சிலர் ருத்தரமூர்த்தி, பாகூரில் ஏற்கனவே இடம் கையப்படுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் செய்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் நமச்சிவாயம் அது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., தங்க விக்கரமன், பா.ஜனதா மகளிரணி தலைவி தவமணி, தமிழ்நாடு அமெச்சூர் சிலம்ப கழக துணை தலைவர் தட்சிணா மூர்த்தி, சங்க நிர்வாகிகள் கேசவன், அய்யப்பன், குமாரபாண்டியன், விஜயபாலன், ஜெயசந்திரன், அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுவை சிலம்பம் மற்றும் அடிமுறை கழக செயலாளர் அன்புநிலவன் போட்டியை ஒருங்கிணைப்பு செய்தார். தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.