உள்ளூர் செய்திகள்
பெர்சியன் ரக பூனையை திருடிய வாலிபர்களை படத்தில் காணலாம்.

விஜய் படத்தால் பிரபலமான பெர்சியன் ரக பூனை திருட்டு

Published On 2022-02-20 14:04 IST   |   Update On 2022-02-20 14:04:00 IST
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தால் பிரபலமான பெர்சியன் ரக பூனை ஒன்று புதுவையில் திருடு போய் உள்ளது.
புதுச்சேரி:

‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் பூனை ஒன்றை வளர்த்து வருவார்.

இந்த படத்தில் ஜேடி என்ற பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் வீட்டில் வலம் வரும் புசு புசு பெர்சியன் ரக பூனையும் இடம் பெற்றிருந்தது. இதனை மக்கள் ரசித்தனர்.

இதனால் ஐரோப்பிய நாடுகளில் வீடுகளில் வளர்க்கப்படும் பெர்சியன் ரக பூனைக்கு தற்போது மவுசு கூடியது.

இந்த நிலையில் பெர்சியன் ரக பூனை ஒன்று புதுவையில் திருடு போய் உள்ளது. புதுவை முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகில் வண்ண மீன்கள் விற்கும் கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக பெர்சியன் ரக பூனையை வளர்த்து வருகிறார்.

கடையில் சுதந்திரமாக இந்த பூனை உலாவி வரும். ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு இந்த பூனை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு 8.30 மணிக்கு கடைக்கு வந்த 3 பேர் அங்கு வளர்க்கப்படும் புறா, வண்ண மீன்கள் பற்றி விவரங்களை கேட்டதுடன் பூனையுடன் விளையாடினர்.

பின்னர் 2 பேர் மட்டும் வெளியேறி மோட்டார் சைக்கிளுடன் தயாராக நின்றுகொண்டனர்.

மற்றொருவர் உரிமையாளரிடம் விசிட்டிங் கார்டு கேட்பது போல் அவரது கவனத்தை திசை திருப்பி பெர்சியன் ரக பூனையை திருடிக் கொண்டு சென்று விட்டார்.

இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. திருடிய பூனையை மீட்டு தருமாறு முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

Similar News