உள்ளூர் செய்திகள்
நாராயணசாமியின் அறிவுரை தேவையில்லை-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆவேசம்
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அறிவுரை தேவையில்லை என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடுநிலை தவறி கட்சி சார்புடன் செயல்படுவதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
எம்.எல்.ஏ.க்களை அழைத்து கட்சிக்காக பேசுவது ஏற்புடையதல்ல என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது, மத்திய பா.ஜனதா மந்திரியை வரவேற்றது ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை மரபுகளை மீறாமல் செயல்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியதாவது:-
நான் மரபுகளை மீறுவதாக கூறுவது தவறு. நான் எந்த கொடி கட்டிய நிகழ்ச்சிகளுக்கும் சென்றதில்லை. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு சென்றேன். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சபாநாயகர்தான் கூட்ட வேண்டும்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூட்ட முடியாது. புதுவைக்கு வந்த பா.ஜனதா மத்திய மந்திரியை நான் தனியாக சந்திக்கவில்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது அங்கு வரும் தலைவரை வரவேற்பது தமிழர் மரபு. இந்தியர்களின் கலாச் சாரம். அதை நாம் மறுக்கக் கூடாது.
தமிழக சபாநாயகர் தேர்தல் பணியை பார்த்தார். கருப்பு, சிகப்பு வேட்டி கட்டிக்கொண்டுதான் சட்டசபையில் அமர்ந்துள்ளார். அது சட்டசபை விதிமீறல் ஆகாதா?
சட்டசபை மரபுகளை மீறாமல் எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். சட்டவிதிகளை நான் படித்து தெரிந்துதான் சபாநாயகர் பதவியை ஏற்றேன். அதனால் எனக்கு பிறர் அறிவுரை செய்வதை நான் விரும்பவில்லை. அதில் தவறு இருந்தால் மாநில கவர்னரும், சுப்ரீம்கோர்ட்டும் கேட்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.