உள்ளூர் செய்திகள்
எய்ட்ஸ் தடுப்பு உயர்நிலை குழு கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.

புதுவையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 உயர்வு

Published On 2022-02-18 08:17 IST   |   Update On 2022-02-18 08:17:00 IST
புதுச்சேரியில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 உயர்த்துவது என முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் மாநில எய்ட்ஸ் தடுப்பு உயர்நிலை குழு கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொடர்பு மற்றும் பயிற்சி தேசிய நிதி ஆலோசகர் ராவத் உட்பல் தாஸ், ஷேர் இந்தியா நிறுவனம் சார்பில் சம்ருதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் உயர்மட்ட குழு உறுப்பினர்களாக உள்ள மாவட்ட நீதிபதி, சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர், குடிமைப்பொருள் வழங்கல் துறை, சமூக நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, தொழிலாளர் துறை உள்பட பல்வேறு துறையின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையில் ரூ.500 உயர்த்தி வழங்குவது, எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விதவை பென்ஷன் பெறுவோருக்கு கூடுதலாக எய்ட்ஸ் தொற்றுக்கான உதவித்தொகையை சேர்த்து வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் ஏ.ஆர்.டி. சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனைக்கு சென்று வர அரசு ஒரு ஆண்டுக்கு வழங்கும் பயண படி ரூ.400 என்பதை ரூ.1,800 ஆக உயர்த்தி வழங்கவும், எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ரூ.1,025 மதிப்புள்ள சத்து பொருட்கள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் சிவப்பு ரேஷன்கார்டு வைத்துள்ள எய்ட்ஸ் நோயாளிகளை அந்தி யோதயா அன்ன யோஜனா திட்டத்தில் சேர்த்து அதற்கான குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு ஆகும் செலவு ரூ.1 கோடியே 57 லட்சத்து 46 ஆயிரத்தை புதுவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

Similar News