உள்ளூர் செய்திகள்
படகை திருப்பி அனுப்பிய கடலோர காவல்படை போலீசார்
புதுவை துறைமுகத்துக்கு சுருக்கு வலையை ஏற்றி வந்த லாரியை கடலோர காவல்படையினர் தடுத்து நிறுத்தியதோடு அதனை கடல் வழியாக கொண்டு செல்ல வந்த படகையும் திருப்பி அனுப்பினர்.
புதுச்சேரி:
மீன்வளத்தை அழிக்க கூடிய சுருக்கு வலைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சிலர் சுருக்கு வலையை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் சுருக்கு வலைக்கு மீன்வளத்துறை முழுமையாக தடை செய்துள்ளது. இதனையும் மீறி சுருக்கு வலையுடன் மீனவர்கள் யாராவது வந்தால் அதனை தடுக்கும் பணியில் கடலோர காவல் படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதுவை துறைமுகத்திற்கு சுருக்கு வலையுடன் லாரி ஒன்று வந்தது. இதனை அறிந்த கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் கடலோர காவல்படையினர் லாரியை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
அதே நேரத்தில் கடல் வழியாக துறைமுகத்திற்கு வந்த வைத்திக்குப்பத்தை சேர்ந்த படகை மடக்கி விசாரித்ததில் லாரியில் வரும் சுருக்கு வலையை ஏற்றுவதற்கு அவர்கள் வந்ததாக தெரிவித்தனர்.
இதனையடுத்து கடலோர காவல் படை போலீசார் சுருக்குவலைக்கு அரசு தடை விதித்து இருப்பதால் அதை ஏற்ற அனுமதிக்கமுடியாது என கூறி படகை திருப்பி அனுப்பினார்கள்.
அதே வேளையில் லாரியில் வந்த சுருக்கு வலை குறித்து விசாரித்து வருகின்றனர்.