உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர்

Published On 2022-02-17 10:20 IST   |   Update On 2022-02-17 10:20:00 IST
பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த பயணியிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான வானூர் அருகே காயல்மேடு  மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதராஜ் (வயது62). இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார்.

இவர் புதுவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல பஸ்சில் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார்.  அப்போது நள்ளிரவு நேரமாகிவிட்டதால் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய பஸ் இல்லாததால் வரதராஜ் காத்திருந்து விட்டு அங்குள்ள பயணிகள் அமரும் சிமெண்ட் கட்டையில் படுத்து தூங்கினார்.

அப்போது ஒரு வாலிபர் நைசாக வரதராஜ் சட்டையில் வைத்திருந்த செல்போனை திருடிக்கொண்டு நழுவி சென்றார். உடனே திடுக்கிட்டு எழுந்த வரதராஜ் செல்போன் திருடி சென்றவனை பிடிக்க முயன்றார். ஆனால் அவன் மாயமாகிவிட்டான்.

இதையடுத்து வரதராஜ் தனது ஊருக்கு சென்று நண்பர்களிடம் இதனை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செல்போன் திருடியவனை பிடிக்க வரதராஜ் தனது நண்பர்களை புதிய பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். 

அப்போது செல்போன் திருடியவன் சென்னை செல்லும் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்ததை வரதராஜ் கண்டார். உடனே நண்பர்கள் உதவியுடன் அவனை பிடித்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் நாகப்பட்டினம் வடகானத்தூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற விஜ்ய்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து விஜ்யை போலீசார் கைது செய்து அவனிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Similar News