உள்ளூர் செய்திகள்
கொலை நடந்த பூக்கடை. (உள்படம்: கொலை செய்யப்பட்ட அருளானந்தம்.)

புதுவை பெரிய மார்க்கெட்டில் பூக்கடை தொழிலாளி படுகொலை

Published On 2022-02-17 10:03 IST   |   Update On 2022-02-17 10:03:00 IST
புதுவை பெரிய மார்க்கெட்டில் பூக்கடை தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரிய மார்க்கெட்டில் வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:

காரைக்கால் திருநள்ளாறு பெரியார்நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் அருளானந்தம் (வயது33). இவர் புதுவையில் தங்கி பெரிய மார்க்கெட்டில் உள்ள ஒரு பூக்கடையில் பூ கட்டும் வேலை செய்து வந்தார்.

இவரும் அங்குள்ள மற்றொரு பூக்கடையில் வேலை பார்க்கும் வைத்திக்குப்பத்தை சேர்ந்த பாலாஜி(20), பாலா(22) ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் வேலை முடிந்ததும் ஒன்றாகவே வெளியே சென்று வருவார்கள்.

மேலும் இவர்கள் இரவில் பூக்கடையிலேயே மது அருந்துவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு மதுபாட்டில்களை வாங்கி வந்து 3 பேரும் பூக்கடையில் அமர்ந்து மது குடித்துள்ளனர். நள்ளிரவு 1 மணி வரை அவர்கள் மது குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது மது போதையில் மாலை அழகாக கட்டுவது தொடர்பாக அருளானந்தத்துக்கும் பாலாஜி மற்றும் பாலா ஆகியோருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதில் பாலாஜியும், பாலாவும் சேர்ந்து அருளானந்தத்தை சரமாரியாக தாக்கினர்.

மேலும் ஆத்திரம் அடங்காத அவர்கள் பூக்கடையை திறந்து கத்தியை எடுத்து வந்து அருளானந்தத்தின் கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அருளானந்தம் இறந்து போனார்.

இதனையடுத்து பாலாஜியும், பாலாவும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இன்று அதிகாலை 3 மணிக்கு துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அருளானந்தம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்குள்ள காவலாளிக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காவலாளி சம்பவ நடந்த இடத்தின் பூக்கடை உரிமையாளருக்கு இதுபற்றி தெரிவித்தார். இதை தொடர்ந்து கடை உரிமையாளர் இதுகுறித்து பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருளானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பாலாஜியும், பாலாவும் சேர்ந்து அருளானந்தத்தை கழுத்தை அறுத்தை படுகொலை செய்தது பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பாலாஜி மற்றும் பாலா ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் பெரிய மார்க்கெட்டில் வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News