உள்ளூர் செய்திகள்
உள்ளூர் கலைஞர்கள் புறக்கணிப்பு- தி.மு.க.கண்டனம்
மத்திய அரசு கண்காட்சியில் உள்ளூர் கலைஞர்கள் புறக்கணிப்பட்டுள்ளனர் என சிவா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர், எதிர் கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு அனைத்து கலைஞர்களின் நலனுக்காக எந்த ஒரு செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. இச்சூழலில் பல கோடி செலவு செய்து மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம் கைவினை பொருள் கண் காட்சியை நடத்தி வருகிறது.
இங்கு உள்ளூர் கலை மற்றும் கைவினை கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. உள்ளூர் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வெளி மாநில கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதை எப்படி ஏற்க முடியும்? இதற்கு பெயர் சுயசார்பா? பிழைக்க வழியின்றி சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ள புதுவை கலைஞர்களை இப்படித்தான் அவமரியாதை செய்வதா?
புதுவையின் இந்திய பிரெஞ்சு கலாச்சார சிறப்பு, பாரம்பரியம், கலைகள் பற்றிய ஒரு அறிகுறியும் இந்நிகழ்வில் இல்லை. வடமாநிலத்தவரின் வருவாயை பெருக்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுவையில் பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர்கள், கலைமாமணி பட்டம் பெற்றவர்களுக்கு கூட முறையான அழைப்பும் மரியாதையும் தரவில்லை. இந்த கண்காட்சி தமிழ் மொழியையும், புதுவை சுயசார்பையும் புறக்கணிப்பதாகவும், இந்தியை திணிப்பதாகவுமே உள்ளது.
மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும், கண்காட்சிகளாக இருந்தாலும் இந்தியில் பெயர் சூட்டி நடத்த அனுமதிப்பதை தவிர்த்து, தமிழில் பெயர் சூட்டி நடத்தினால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். உள்ளூர் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இல்லை யெனில் மீண்டும் ஓர் மொழிப் போராட்டம் தொடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.