உள்ளூர் செய்திகள்
பணி உயர்வு வழங்கக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்
பணி உயர்வு வழங்கக்கோரி கல்லூரி பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் உயர்கல்வி இயக்குனரகத்தின் கீழ் புதுவை உயர்கல்வி குழுமம் அரசின் முழு நிதியுதவியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த குழுமத்தின் மூலம் புதுவையில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளும், காரைக்காலில் ஒரு கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக எந்த பணி உயர்வும் வழங்கவில்லை. மாத சம்பளமும் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உள்பட இதர படிகள் அரசு ஊழியர்களுக்கு இணையாக கடந்த 6 ஆண்டாக வழங்கவில்லை. பல முறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் நிதித்துறை செயலர், அதிகாரிகளை கண்டித்தும், சம்பளம், பணி உயர்வு, 7-வது சம்பளக்குழு நிலுவைத்தொகை உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாணவர்களின் வகுப்புகள், தேர்வுகள் பாதிக்காத வகையில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
அனைத்து கல்லூரிகளிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் வகுப்புகளை நடத்தினர். வருகிற 19-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ் அணியவும் திட்டமிட்டு உள்ளனர். 16-ந்தேதி 5 கல்லூரிகளின் முன்பு வாயிற்கூட்டம் நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கருப்பு பேட்ஜ், கோரிக்கை அட்டை அணிந்து வகுப்புகளை நடத்தவும், 24-ந்தேதி உயர் கல்வி குழும தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும், 25-ந்தேதி மாலை 6 மணி முதல் கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் சங்க தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.