உள்ளூர் செய்திகள்
தி.மு.க.பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம்
தி.மு.க.பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசிய சம்பவம் குற்றவாளியை நெருங்கி விட்டனர் தனிப்படை போலீசார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் 2-வது நேதாஜி நகர் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிராங்ளின் (59). பொதுப்பணித்துறை காண்டிராக்டர். தி.மு.க. பிரமுகர்.
பிராங்ளின் வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவரது மனைவி குளோதினி, பேரன், பேத்திகள் மட்டும் இருந்தனர்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடி குண்டுகளை பிராங்ளின் வீடு மீது அடுத்தடுத்து வீசியதில்பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
சம்பவ இடத்தை கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில் ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்&இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.
குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்தது,அதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற சதிஷ் (வயது23) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் விக்னேஷ் குடும்பத்துக்கு பிராங்ளின் சில உதவிகளை செய்து வந்துள்ளார். விக்னேஷ் சமையல் தொடர்பாக படித்து விட்டு வெளிநாடுகளில் வேலை பார்த்துள்ளார். இந்தநிலையில் மறுபடியும் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக பிராங்ளினிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பிராங்ளினால் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் நாட்டு வெடிகுண்டை பிராங்ளின் வீடு மீது வீசி சென்றதாக தெரியவந்தது.
தலைமறைவாக உள்ள விக்னேசை பிடிக்க தனிப்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுவை மட்டுமின்றி தமிழகத்திலும் விக்னேசை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.இந்தநிலையில் அவர் பதுங்கி இருக்கும் இடத்தை அறிந்த தனிப்படை போலீசார் அந்த இடத்திற்கு செல்லும் போது அவர் தனது இருப்பிடத்தை மாற்றி, மாற்றி தலைமறைவாகி வருகிறார்.
இதற்கிடையை இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணைக்காக பிடித்து வைத்துள்ள நபரில் ஒருவர் முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்தில் வேறொரு வழக்கில் விக்னேசுடன் சம்பந்தப்பட்டவர் என கூறப்படுகிறது.ஓரிரு நாளில் வெடிகுண்டு வீசிய விக்னேசை தனிப்படை கைது செய்து விடுவார்கள் என தெரிகிறது.