உள்ளூர் செய்திகள்
ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் ஊர்வலம்
ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
புதுச்சேரி:
கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.
அப்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் நேரடியாக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்லைனில் வகுப்புகள் நடத்திவிட்டு தேர்வை நேரடியாக நடத்தக்கூடாது. ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அண்ணாசிலை அருகே ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சட்டசபை நோக்கி வந்தனர். செஞ்சி சாலை அருகே போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.