உள்ளூர் செய்திகள்
கவர்னர் தமிழிசையை சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து மனு அளித்த

கவர்னருடன் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

Published On 2022-02-08 14:56 IST   |   Update On 2022-02-08 14:56:00 IST
கவர்னர் தமிழிசையை சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து மனு அளித்தனர்.
புதுச்சேரி: 

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்துள்ளது. ரங்கசாமி அமைச்ச ரவையில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த 3 அமைச்சர்கள், பா.ஜ.க.வை சேர்ந்த 2 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.  சபாநாயகர், பாராளுமன்ற செயலர் ஆகிய பதவிகளில் பா.ஜ.க.வும், துணை சபாநாயகர், அரசு கொறடா பதவிகளில் என்.ஆர்.காங்கிரஸ்  எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். 

சட்டமன்ற பதவிகளில் இடம் பெறாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய பதவி வேண்டும் என கேட்டு வந்தனர். இதனிடையே ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அரசு  அமையும் போது சுயேட்சையாக வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்களில் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகிய 3 பேர்  தாமாக முன்வந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்தனர். 

இதற்கான கடிதத்தையும் பா.ஜ.க.விடம் அளித்தனர். பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியின் சார்பில் வாரிய தலைவர் பதவி உட்பட சில வாக்குறுதிகள் அளிக் கப்பட்டன. ஆனால் ஆட்சி அமைந்து 8 மாதமாகியும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்கப்படவில்லை. 

சமீபத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், முதல்-அமைச்சரை சந்தித்து வாரிய பதவி கேட்டனர். ஆனால் ரங்கசாமி, அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் வாரிய தலைவர் பதவி வழங்க முடியாது என மறுத்து விட்டார். 

இதனால் எம்.எல்.ஏ.க் களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற முடிவு செய்தனர். இந்த தகவல் வெளியானவுடன் பா.ஜனதா தரப்பில் அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் சந்தித்தனர். 

அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் இறங்கினார். அப்போது பா.ஜ.க. வுக்கு ஆதரவு அளிப்பதால்,   தங்களின் தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. தங்கள் தொகுதி புறக்கணிக்கப்படுவதாக சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர். 

பிப்ரவரி 9-ந்தேதி பா.ஜனதா சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் நடக்கிறது.  இதில் பங்கேற்க மத்திய மந்திரி பிரகலாத்சிங் படேல், புதுவை மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் புதுவைக்கு  வருகின்றனர். இவர்கள் மூலம் அதிருப்தி சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்ய பா.ஜனதா திட்டமிட்டிருந்தது. 

இந்த நிலையில் திடீரென  8-ந்தேதி மதியம் 12.45 மணிக்கு கவர்னர் தமிழிசையை சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகிய 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். அவர்கள் கவர்னரிடம் தங்கள் குறை களை தெரிவித்ததாக தெரிகிறது. மதியம் 1.30 மணி வரை கவர்னர் மாளிகையிலிருந்து திரும்பவில்லை. இதனிடையே அங்காளன் வராதது குறித்து 2 எம்.எல்.ஏ.க்களிடம் கேள்வி எழுப்பியதற்கு பதில் கூறவில்லை. அங்காளன் எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்ட போது அவரின் செல்போன் சுவிடச்ஆப் செய்யப்பட்டிருந்தது. 

இதனிடையே 8-ந்தேதி காலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கவர்னர் தமிழிசையை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

என்.ஆர்.காங்கிரசுக்கு 10, பா.ஜ.க.வுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்ளனர். மொத்தம் உள்ள 33 எம்.எல்.ஏ.க்களில் 19 எம்.எல்.ஏ.க்கள் பலம் அரசுக்கு உள்ளது. மெஜாரிட்டிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News