உள்ளூர் செய்திகள்
மோசடி

புதுவையில் பிரபல தனியார் நிறுவனம் பெயரில் கிரிப்டோ கரன்சி மோசடி- சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார்

Published On 2022-02-08 13:54 IST   |   Update On 2022-02-08 13:54:00 IST
புதுவையில் பிரபல தனியார் நிறுவனம் பெயரில் கிரிப்டோ கரன்சி மோசடி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

கோவையை சேர்ந்த பிரபல தனியார் நிறுவன அதிபர் மார்ட்டின் சார்பில் சம்பத்குமார் என்பவர் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

கோவையை சேர்ந்த நூர்முகமது, அஷ்பக் ஆகியோர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்திய விழாவுக்கு எனக்கும், என் குடும்பத்துக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

இதன்பேரில் என் மனைவி லீமாரோஸ் மார்ட்டின் கோவையில் நடந்த விழாவில் பங்கேற்றார். எங்கள் நிறுவனத்துக்கும், இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஆனால் எங்கள் நிறுவனம் தான் இதன் பின்னணியில் செயல்படுவதாக பொய்யான தகவல்களை பரப்பி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து கோவையில் நாங்கள் புகார் அளித்தோம். இனி எங்கள் பெயரையோ, நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்த மாட்டோம் என அவர்கள் வாக்குறுதி அளித்து மன்னிப்பு தெரிவித்தனர்.

இப்போது புதுவையில் அதேநபர்கள் விஷ்ணுவரதன் என்ற நபர் மூலம் எம்.எல்.எம். என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனத்தை நடத்த தொடங்கியுள்ளனர்.

அவர்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி வருவதாக அறிகிறோம். இவர்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரை கூறி முதலீடுகளை பெற்று வருகின்றனர்.

எங்களுக்கும், இந்த நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் நிறுவனம் எந்த கிரிப்டோ கரன்சிக்காகவும் முதலீடுகளை பொது மக்களிடம் கேட்கவில்லை.

இந்த நிலையில் எங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News