உள்ளூர் செய்திகள்
கைது

மினி வேனில் கடத்தி வந்த போதை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2022-01-07 05:50 GMT   |   Update On 2022-01-07 05:50 GMT
புதுவையில் மினி வேனில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி:

உருளையன்பேட்டை போலீசார் நேற்று இரவு புவன்கரே வீதி- வினோபா வீதி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அதில் 2 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட ஏராளமான பாக்கெட்டுகளில் போதை பொருட்கள் இருந்தன.

இதையடுத்து மினி வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உருளையன் பேட்டை ராஜா நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜெயராஜ் (வயது 42) என்பது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் இந்த போதை பொருட்கள் பிருந்தாவனத்தை சேர்ந்த முகேஷ் (37) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. ஆனால், இதற்கான எந்த ஆவணங்களும் டிரைவரிடம் இல்லை.

இந்த போதை பொருட்களை முகேஷ் வீட்டில் வைத்து புதுவையில் உள்ள கடை வியாபாரிகளுக்கு சப்ளை செய்ய கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய மினி வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போதை பொருட்களை கடத்தி வந்த மினி வேன் டிரைவர் ஜெயராஜ் மற்றும் முகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News