உள்ளூர் செய்திகள்
புதுவை மாவட்ட கலெக்டர் வல்லவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

ஓட்டல்கள், கடைகள், மது பார்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி- புதுவையில் மேலும் கட்டுப்பாடுகள்

Published On 2022-01-07 08:07 IST   |   Update On 2022-01-07 08:07:00 IST
புதுவையில் ஓட்டல்கள், கடைகள், மது பார்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிப்பது உள்பட மேலும் பல கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவாக ஒமைக்ரான் மிரட்டி வருகிறது.

புதுச்சேரியில் கடந்த வாரம் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு 4 நாளில் 6 மடங்கு அதிகரித்துள்ளது. தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்து வருவது குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நாடு முழுவதும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் முழு ஊரடங்கு அமல்படுத்தக்கூடாது என்பதே அரசின் எண்ணம். அதன்படி கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வருவாய், காவல்துறை, சுகாதாரம், உள்ளாட்சி ஆகிய துறைகளின் அலுவலர்கள் இணைந்து மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வருவோரில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி உண்டு. அதிகாரிகள் பரிசோதனையின் போது கொரோனா அறிகுறி ஏதாவது இருந்தால் உடனடியாக அவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

புதுச்சேரியில் கொரோனாவின் 3-வது அலை அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி வணிக வளாகம், சந்தை வளாகங்கள், கடைகளில் போதுமான காற்றோட்டத்தை உறுதி செய்து 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டத்திற்கு இடையேயும் பொது போக்குவரத்து 50 சதவீதம் இருக்கை வசதியுடன் செயல்பட வேண்டும். தியேட்டர்கள், மல்டி பிளக்ஸ்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீதம் இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.

உணவகங்கள், ஓட்டல்கள், பார்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் துறை நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆடிட்டோரியம், கலையரங்கம், அழகு நிலையம், சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், யோகா பயிற்சி மையம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோவில்களில் குடமுழுக்கு, கும்பாபிஷேகம் ஆகியவற்றில் பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்பின்றி அர்ச்சகர்கள் மட்டுமே நடத்த வேண்டும். கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில் தற்போதைய நடைமுறையே பின்பற்றப்படும். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்பு தொடர்பாக விரைவில் தெரிவிக்கப்படும். கடற்கரை சாலையில் தற்போது உள்ள நடைமுறையே தொடரும்.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தின்படி கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் செயல்படும் நேரம் மற்றும் சுழற்சி முறையில் ஏதாவது மாற்றம் செய்வதாக இருந்தால் அது குறித்து கல்வித்துறை முடிவு செய்து அறிவிக்கும்.

இந்த உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்தது. வருகிற 31-ந் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும்.

கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்ததுடன் 2 டோஸ் தடுப்பூசி போட்டது காரணமாக பொதுமக்களிடம் மெத்தனம் ஏற்பட்டுள்ளது. எனவே சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் முக கவசம் அணிவது இல்லை. இதுவும் தொற்று பரவலுக்கு காரணமாகிறது.

எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

புதுச்சேரியில் வருகிற 12-ந் தேதி முதல் தேசிய இளைஞர் விழா நடத்தப்பட உள்ளது. கொரோனா தொற்று அதிகமாக பதவி வருவதால் இந்த விழாவை நேரடியாக நடத்துவதா? அல்லது இணைய வழி வாயிலாக நடத்துவதா? என்பது பற்றி மத்திய அரசு தகவலை உறுதிப்படுத்தவில்லை. நேரடியாக நடத்துவதாக இருந்தால் அதற்கு தேவையான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்து வருகிறது. பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை தொடர்பாகவும் மத்திய அரசின் முறைப்படியான தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறுகையில், ‘புதுச்சேரியில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 126 பேருக்கு தொற்று உள்ளதா? என கண்டறிய மாதிரிகளை பெங்களுரூ ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அதில் 26 பேரின் மாதிரி பரிசோதனை முடிவுகள் மட்டும் இன்னும் வரவில்லை. இந்த பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரியும் வகையில் புதுச்சேரியில் ஆய்வு கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான கருவிகள் வந்ததும் பரிசோதனை கூடம் அமைக்கப்படும்’ என்றார்.

Similar News