உள்ளூர் செய்திகள்
புதுவையில் ஒரே நாளில் 129 பேருக்கு கொரோனா
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பின் புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் கொரோனா 2-வது அலையை விட 3-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவையிலும் கொரோனாவை கட்டுப் படுத்த பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறையினர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனாலும், புதுவையில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 608 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 84, காரைக்காலில் 36, ஏனாமில் 1, மாகியில் 8 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 46, காரைக்காலில் 19, மாகியில் 7 பேர் என 72 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 4, காரைக்காலில் 1, மாகியில் 3 பேர் என 8 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 821 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 541 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 231, காரைக்காலில் 72, ஏனாமில் 2, மாகியில் 22 பேர் என 327 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்
படுத்தப்பட்டு உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இப்போது 399 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 881 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 14 லட்சத்து 20 ஆயிரத்து 267 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பின் தொற்று அதிகரிக்க தொடங்கியது. 26, 27 என தொற்று இருந்து வந்தது. நேற்று 73 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் தற்போது ஒரே நாளில் 129 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.