உள்ளூர் செய்திகள்
ஒமைக்ரான் பரவும் அபாயம் பிரதமர் புதுவை வருகைக்கு தி.மு.க.-காங்கிரஸ் எதிர்ப்பு
பிரதமர் புதுவை வருவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. விதி முறைகளை கடைபிடிக்காததற்கு ஐகோர்ட்டு புதுவை அரசை கண்டித்துள்ளது.
இந்நிலையில் தேசிய இளையோர் தின விழாவை புதுவையில் நடத்த அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதில் 40 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என கவர்னர் தெரிவித்துள்ளார்.
தொற்று அதிகம் உள்ள வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றால் புதுவையில் கடுமையான பாதிப்பு ஏற்படும். விழா நடத்தி தொற்றை பரப்பிவிட்டு வீடுகளில் மக்களை முடக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.
தேசிய இளைஞர் விழா என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வளர்க்க பா.ஜனதா நினைக்கிறது. இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் துணை செல்லக்கூடாது. 10 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்பாமல் விழா நடத்துவது புதுவை இளைஞர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
எனவே தேசிய இளைஞர் விழாவை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் விழா நடைபெறும் இடங்களில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் எந்த கட்டுப் பாடும் இல்லாமல் மக்கள் நடமாடுகின்றனர். இதனால் கொரேனா அதிகரித்து வருகிறது. புதுவை மக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
புதுவையில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது. முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னர் அனைத்து அறிவிப்புகளையும் வெளியிடுகிறார். பிரதமர் புதுவைக்கு வருகிறார் என கவர்னர் கூறுகிறார். பிரதமர் வருகை குறித்து முதல்-அமைச்சரோடு கலந்து பேசினாரா? என தெரியவில்லை.
இளைஞர் விழா புதுவையில் நடத்த முடிவெடுக்கும் முன்பு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இமாச்சல மாநில அரசு விழாவை நடத்த அனுமதிக்கவில்லை.
கொரோனா காலத்தில் இதுபோன்ற விழாக்களை நடத்த அனுமதிக்கக்கூடாது. எந்த சூழலில் பிரதமர் வருகிறார்? தற்போதைய சூழலில் புதுவைக்கு இளைஞர் விழா தேவையா? 8 ஆயிரம் இளைஞர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் வந்தால்
கொரோனா எப்படி பரவாமல் இருக்கும்? விழாவில் சமூக இடை வெளியை கடைபிடிக்க முடியுமா?
புதுவைக்கு வரும் முடிவை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேசிய இளைஞர் விழாவை புதுவையில் நடத்துவதை தள்ளிவைக்க வேண்டும். ஒமைக்ரான், கொரோனா தொற்று புதுவையில் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலத்தினரால் புதுவையில் தொற்று பரவி மக்கள் அவதிப்படுவர். ரங்கசாமி பிரதமருக்கு கடிதம் எழுதி, தற்போதைய சூழலில் விழா நடத்தினால் கொரேனா பரவும் என தைரியமாக கடிதம் எழுத வேண்டும். விழாவை ரத்து செய்ய வேண்டும். பா.ஜனதாவினர் இதில் அரசியல் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவால்தான் அம்மாநிலத் தில் கொரோனா தொற்று கடுமையாக பரவியது. தற்போது புதுவையில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இமாச்சலத்தில் நடத்த வேண்டிய விழாவை புதுவையில் திணித்துள்ளனர். இதன் மூலம் புதுவை மக்களிடையே நோயை திணிக்கின்றனர். இதற்கு கவர்னரும், முதல்-அமைச்சரும் துணை செல்கின்றனர்.
ஏற்கனவே கொரோனா நஷ்ட ஈடைக்கூட மத்திய அரசு தரவில்லை. இந்த விழாவுக்காக அரசு நிதி வீணாக செலவிடப்படுகிறது. உள்நோக்கத்தோடும், லாப நோக்கத்தோடும் இந்த விழாவை பா.ஜனதா நடத்துகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறோம். பிரதமர் தனது வருகையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலசெயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒமைக்ரான் பரவல் தொடர்பாக பிரதமர், மத்திய அரசு, மத்திய சுகாதாரத்துறை ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2-வது அலை பரவியபோது புதுவையில் படுக்கைகள் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பித்துள்ளனர். 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டுகளும் ஆன்லைன் மூலம் செயல்படுகிறது.
இத்தகைய அபாயகரமான சூழலில் வருகிற 12-ந்தேதி தேசிய இளைஞர் விழா புதுவையில் நடக்கிறது. இதில் 7 ஆயிரத்து 500 பேர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் பேர் விழாவில் பங்கேற்க வருவர். ஏற்கனவே கொரோனா பரவல் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இமாச்சலபிரதேசத்தில் நடத்த வேண்டிய விழாவை புதுவைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அபாயகர சூழ்நிலையால் புதுவை மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே பிரதமர் தன் வருகையை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி டோண்ட் கம் மோடிஜி என இமெயில், தபால் அனுப்ப உள்ளோம். பிரதமர் வரக்கூடாது என வலியுறுத்தி 10-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதையும் மீறி பிரதமர் வந்தால் புதுவையில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.