உள்ளூர் செய்திகள்
இந்தியாவில் வேலை தருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு-மத்திய மந்திரி பெருமிதம்
இந்தியாவில் வேலை தருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி அனுராக் தாகூர் பெருமிதம் தெரிவித்தார்.
புதுச்சேரி:
நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து 7 ஆயிரத்து 500 இளைஞர்கள் பங்கேற்கும் தேசிய இளைஞர் விழா வருகிற 12-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை புதுவையில் நடக்கிறது.
பு-துவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய தகவல் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மந்திரி அனுராக் தாகூர் புதுவைக்கு வந்தார். பல்கலைக்கழகத்தில் விழா நடைபெறும் இடங்களை பார்வையிட்டார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத்சிங் மற்றும் அதிகாரிகள் உடனிருந்து விளக்கினர்.
இதன்பின் தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முன்னிலையில் கவர்னர் தமிழிசை தேசிய இளைஞர் தின விழா லோகோவை வெளியிட்டார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
இதில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் பேசியதாவது:-
தேசிய இளைஞர் தினவிழா திறன்மிகு இளைஞர்கள், ஆற்றல் மிகு இளைஞர்கள் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடக்கும். நாடு முழுவதும் இருந்து இளைஞர் வருவதால் புதுவையின் திறனை வெளிப்படுத்த இந்நிகழ்வு உதவும் என்றார்.
இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
அரவிந்தர், பாரதி, விவேகானந்தர் ஆகியோர் இளைஞர்களுக்கு முன்மாதிரிகள். பாரம்பரியத்தை இளையோருக்கு முன்நிறுத்தவே இவ்விழா நடத்துகிறோம். பிரதமர் மோடி விழாவை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இத்திருவிழாவை புதுவையில் நடத்த பிரதமர் விரும்பினார்.
கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளுக்கான வழிமுறைகளை செய்துள்ளோம். புதிய நிறுவனங்களை தொடங்குவோர், சுய தொழில் புரிவோர், வங்கி சார்ந்த துறைகள், தொழில் முனைவோர் அதிகரித்துள்ளனர். வேலை கேட்போரை விட வேலை தருவோர் அதிகரித்துள்ளனர். கொரோனா தொற்று இருந்தால் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகின்றனர். ஒமைக்ரானை பொறுத்த வரை சிலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்கின்றனர்.
தொற்று பாதித்தவர்கள் விரைந்து குணம் அடைவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். வானொலி சேவையை நாங்கள் முடக்கவில்லை விரிவுபடுத்துகிறோம். பிரதமர் உரையாற்றும் மன் கி பாத் நிகழ்வை வானொலியில் கேட்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது போனிலும் கேட்கும் வகையில் தொழில் நுட்பத்தை பலப்படுத்தி உள்ளோம். இந்திய விளையாட்டு ஆணையத்தில் பெறப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளின்படி நட வடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.