செய்திகள்
கொரோனா வைரஸ்

போலீஸ் குடியிருப்பில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா

Published On 2021-11-30 10:49 GMT   |   Update On 2021-11-30 10:49 GMT
நாகர்கோவில் நகரில் போலீசார் மற்றும் குடும்பத்தினர் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சம்பவம் சக போலீசார் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில் மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி சுகாதாரத்துறையினர் சளி மாதிரிகளை பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவுகள் நேற்று இரவு தெரிய வந்தது. இதில் கணேசபுரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை கணேசபுரம் போலீஸ் குடியிருப்பு முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது.

2 குழந்தைகள் படித்து வந்த பள்ளியிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்த பள்ளியில் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.

நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன்குமாருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.

டி.எஸ்.பி.யுடன் தொடர்பில் இருந்த 30 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் இன்று மாலை தெரிய வரும்.

நாகர்கோவில் நகரில் போலீசார் மற்றும் குடும்பத்தினர் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சம்பவம் சக போலீசார் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News