செய்திகள்
மழைநீர் தேங்கி உள்ளதை படத்தில் காணலாம்.

அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் தேங்கி நிற்கும் மழைநீர்

Published On 2021-11-30 04:58 GMT   |   Update On 2021-11-30 04:58 GMT
அரியலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்பவர்கள் மீது தெறிப்பதால் அவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரியலூரில் இருந்து செந்துறை, ஜெயங்கொண்டம், அயன் ஆத்தூர், பொய்யூர், தூத்தூர், திருமழபாடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலைகள் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சாலைகளின் இருபுறமும் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

அரியலூர் நகரில் மார்க்கெட் தெரு, வெள்ளாழத் தெரு, மேல அக்ரஹாரம், ஆஸ்பத்திரி ரோடு, செந்துறை ரோடு ஆகிய பகுதியில் உள்ள சாலைகள் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. நகரில் பல இடங்களில் சாலை ஓரம் மழைநீர் தேங்காமல் இருக்க பாதை அமைக்கப்பட்டது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள் தங்கள் கடைகளுக்கு முன்பு கான்கிரீட் தளம் அமைத்து உள்ளதால் பல இடங்களில் நீர் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. சில இடங்களில் குப்பைகள் அடைத்துள்ளது.

இதனால் பல இடங்களில் மழைநீர் சாலையோரங்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நெடுஞ்சாலை துறையில் உள்ள சாலை பணியாளர்கள் மாவட்டத்தில் உள்ள எந்த சாலைகளையும் பராமரிப்பதில்லை என்று சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்படுகிறது. வாகனங்கள் வேகமாக செல்லும்போது தேங்கியுள்ள மழைநீர் நடந்து செல்பவர்கள் மீது தெறிக்கிறது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வெளியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மீது சேறும், சகதியும் பட்டு உடைகள் வீணாகின்றன. எனவே நெடுஞ்சாலை துறையினர் சாலையோரத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றி, சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News