செய்திகள்
பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பாதுகாப்புடன் அழைத்து வந்த காட்சி.

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை- பள்ளி ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்

Published On 2021-11-25 06:56 GMT   |   Update On 2021-11-25 06:56 GMT
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை:

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத குற்றத்திற்காக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியால் வேறு எந்த மாணவியும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பது பற்றி விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக 5 நாள் காவல் கேட்டு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், மிதுன் சக்கரவர்த்தியை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவரை வேனில் ஏற்றி சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக இந்த வழக்கில் கைதான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் தனக்கு ஜாமீன் வழங்ககோரி கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மீரா ஜாக்சன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.


Tags:    

Similar News