செய்திகள்
மழை

நாகை, வேதாரண்யத்தில் பரவலாக மழை- உப்பு உற்பத்தி பாதிப்பு

Published On 2021-11-18 10:12 GMT   |   Update On 2021-11-18 10:12 GMT
நாகை, வேதாரண்யத்தில் பெய்த பரவலான மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி, வேளாங்கண்ணி உள்பட பல பகுதிகள் உள்ளன. நாைக மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வயலில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

வேதாரண்யம் பகுதியில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. வயல்களில் தேங்கி நின்ற தண்ணீர் லேசாக வடிந்து கொண்டிருக்கிறது. மேலும் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் வருமான இழப்பை சந்தித்து உள்ளனர்.

கீழ்வேளூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலை 3 மணி முதல் கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. கீழ்வேளூர், வடகரை, கோகூர், ஆனைமங்கலம், நீலப்பாடி, அத்திப்புலியூர், குருக்கத்தி, கூத்தூர், குருமணாங்குடி, தேவூர், வெண்மணி, பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம், சிக்கல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மீண்டும் கனமழை பெய்ய தொடங்கினால் பலத்த நஷ்டம் ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். நாகை மாவட்டம் நாகூரில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான மழை விட்டு, விட்டு பெய்தது. நேற்று காலை வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மக்கள் வெளியில் சென்று வர முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News