செய்திகள்
கர்ப்பிணி பெண்

அயோடின் சத்து குறைந்தால் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு- டாக்டர் அறிவுறுத்தல்

Published On 2021-10-23 02:50 GMT   |   Update On 2021-10-23 02:50 GMT
அயோடின் சத்து குறைந்தால் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர் அறிவுறுத்தினார்.
காரைக்கால்:

ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி உலக அயோடின் கோளாறுகள் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காரைக்கால் மாவட்ட நலவழித்துறை ஊட்டச்சத்து பிரிவு சார்பில், காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அயோடின் குறைபாடுகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

டாக்டர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். டாக்டர் பால அரவிந்தன், சுகாதார மேற்பார்வையாளர் எழிலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார உதவி ஆய்வாளர் ஜெகநாதன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் டாக்டர் பால அரவிந்தன் பேசியதாவது:-

அயோடின் சத்து மனிதர்களின் உடல் ஆரோக்கியம், மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதனால் அனைவரும் அயோடின் சத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக அயோடின் சத்து குறைபாட்டால் முன் கழுத்து வீக்கம், உடல் சோர்வு, மந்தநிலை, எடை அதிகரித்தல், மனச்சோர்வு, முடி உதிர்வு, வறண்ட சருமம் போன்றவை ஏற்படும்.

குறிப்பாக கர்ப்ப காலத்தில் அயோடின் சத்து குறைவு ஏற்பட்டால் பெண்களுக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம், மகப்பேறுக்கு முன் சிசு மரணம் கூட ஏற்பட வாய்ப்புண்டு. பிறக்கும் குழந்தைகளுக்கும் மூளை வளர்ச்சி பாதிப்பு மற்றும் பிறவி ஊனம் கூட ஏற்படலாம்.

அயோடின் சத்துக்கள் நிறைந்த முட்டை, இறைச்சி, கீரை, மீன், பால், வாழைப்பழம் மற்றும் அயோடின் கலந்த உப்பு போன்றவற்றை உண்பதால் அயோடின் குறைபாடுகள் வராது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News