செய்திகள்
அமராவதி

புதுகாரை இயக்கிய போது, பள்ளி கட்டிடத்தில் மோதி ஆசிரியை பலி

Published On 2021-10-19 11:08 GMT   |   Update On 2021-10-19 11:08 GMT
போச்சம்பள்ளி அருகே புதுகாரை ஓட்டி பழகிய போது ஏற்பட்ட விபத்தில் ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:

தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அமராவதி (வயது 44). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஆசிரியை அமராவதி கடந்த சில நாட்களுக்கு முன் புது காரை வாங்கினார். இதனால் ஒரு டிரைவரை வேலைக்கு அமர்த்தி, தினமும் தருமபுரியில் இருந்து, புதுகாரில் போச்சம்பள்ளிக்கு ஆசிரியை அமராவதி சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து ஆசிரியை அமராவதி வெளியே வந்தார். அப்போது கார் டிரைவர் கடைக்கு சென்று விட்டார்.

இதனால் டிரைவர் வரும்வரை ஆசிரியை அமராவதி, காரை ஓட்டி பழகலாம் என்று எண்ணினார். அதன்படி புது காரில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை இயக்கினார்.

அப்போது காரை கிளம்பிய போது திடீரென அவர் பிரேக்குக்கு பதிலாக கிளட்சை மிதித்து விட்டார். இதில் சீறிபாய்ந்த கார், வேகமாக பள்ளி கட்டிடத்தின் மீது மோதியது. இதில் ஆசிரியை அமராவதி, பலத்த காயம் அடைந்தார்.

உடனே அவரை சக ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஆசிரியை அமராவதி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விபத்தில் பலியான ஆசிரியை அமராவதிக்கு சக்திவேல் என்ற கணவரும், 12 வயதில் இரட்டை மகன்களும் உள்ளனர். சக்திவேல் கும்பகோணத்தில் டி.ஆர்.ஓ.வாக பணியாற்றி வருகிறார்.
Tags:    

Similar News