செய்திகள்
அஞ்சல் உறைகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டபோது எடுத்த படம்

புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துங்கள்- கவர்னர் வேண்டுகோள்

Published On 2021-09-29 02:46 GMT   |   Update On 2021-09-29 02:46 GMT
நமக்கு வேண்டியவர்களிடம் மனம் விட்டு பேச கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் தயாரிக்கப்படும் புவிசார் குறியீடு பெற்ற சுடுமண் சிற்பங்கள் மற்றும் காகிதக்கூழ் பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.

தலைமை அஞ்சல் நிலையம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அஞ்சல் உறைகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார். சென்னை மண்டல அஞ்சல்துறை இயக்குனர் சோமசுந்தரம், சென்னை நகர அஞ்சல்துறை தலைமை அதிகாரி வீணா ஸ்ரீநிவாஸ், தலைமை அஞ்சல் நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம், மக்கள் தொடர்பு ஆய்வாளர் கருணாகரன், தேசிய விருதுபெற்ற டெரகோட்டா கலைஞர் முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக நாட்டின் வரலாறு, சாதனைகள், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு குறியீடு கொடுத்து பிரபலப்படுத்துவது ஆகும்.

புவிசார் குறியீடு பெற்றுள்ள புதுச்சேரியில் தயாரிக்கப்படும் சுடுமண் சிற்பங்கள், காகிதக்கூழ் பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிடுவதற்காக தலைமை அஞ்சலகத்தை பாராட்டுகிறேன்.

தற்போது கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. கடிதம் மிகப்பெரிய உறவுகளை கட்டமைத்து இருக்கிறது. வரலாறு படைத்துள்ளது. பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

நமக்கு வேண்டியவர்களிடம் மனம் விட்டு பேச கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட காலத்தில் கடிதங்கள் மிகப்பெரிய பங்காற்றி இருக்கின்றன. வரலாறுகளையும், பண்பாட்டு பாரம்பரியத்தையும், நாம் பாதுகாக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலமானது கை, கால்களை கழுவுவது போன்ற நம் முன்னோர்களின் சில பழக்க வழக்கங்களை நமக்கு சொல்லி கொடுத்துள்ளது.

நாம் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதன்மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News