செய்திகள்
நெற்பயிரில் மழைநீர் புகுந்து இருப்பதை விவசாயி கவலையுடன் பார்ப்பதை படத்தில் காணலாம்.

பாகூரில் ஒரே இரவில் 110 மி.மீ. மழை- அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

Published On 2021-09-26 15:07 GMT   |   Update On 2021-09-26 15:07 GMT
பாகூர் பகுதியில் நேற்று ஒரே இரவில் 110 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் பல இடங்களில் மரங்கள் விழுந்து காணப்படுவதாகும் தெரிவிக்கின்றனர்.

பாகூர்:

பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பகலில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தியது. பின்னர் இரவு 11.30 மணி அளவில் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இந்த மழை சுமார் நள்ளிரவு 2.30 மணி வரை நீடித்தது இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. தாழ்வான பகுதியில் உள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகளிலும், வீட்டை சுற்றியுள்ள பகுதியிலும், தெருவிலும் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் பாகூர் செல்லும் உயர்ரக மின்கம்பம் பழுது ஏற்பட்டதால் நேற்று மாலையில் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் இல்லாத நிலையில், நள்ளிரவு பெய்த மழையின் காரணமாக தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.

இதேபோன்று குருவி நத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, ஆராய்ச்சி குப்பம், சேலியமேடு, குடியிருப்பு பாளையம் ஆகிய பகுதிகளிலும் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் இரவு முழுக்க தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

பொதுப்பணித்துறை கணக்கெடுப்பின்படி பாகூர் பகுதியில் நேற்று ஒரே இரவில் 110 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் பல இடங்களில் மரங்கள் விழுந்து காணப்படுவதாகும் தெரிவிக்கின்றனர்.

இந்த மழையின் காரணமாக தற்போது சித்தரை சம்பா சொர்ணவாரி பயிர் அறுவடை நிலையிலிருந்த நிலையில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் மழை நீர் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் அறுவடை செய்து களத்தில் வைத்திருந்த நெல் பயிர்களும் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இப்குதியில் முறையான வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் இருந்ததால் மழை நீரை வெளியேற்ற விவசாயிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர். சித்திரை சொர்ணவாரி பயிரில் ஐ.ஆர்.50, சின்னப்பொன்னி, எ.டி.டீ. 51, 45 ரக நெற்பயிர்கள் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News