செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

புதுவைக்கு ரூ.700 கோடிக்கு அதிகமாக மத்திய அரசு சலுகைகள்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2021-08-28 02:43 GMT   |   Update On 2021-08-28 02:43 GMT
பள்ளிகள் விரைவில் திறக்கப்பட இருப்பதால் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி:

நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, "ஆசாதிகா அம்ரித் உத்சவின்" ஒரு பகுதியாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் புதுச்சேரி களவிளம்பரம் மற்றும் செய்திப் பிரிவு சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு காணொலி வாகன பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இதன் தொடக்க விழா கவர்னர் மாளிகை முன்பு நேற்று காலை நடந்தது. கொடியசைத்து விழிப்புணர்வு வாகனங்களை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் (தெற்கு) தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர், புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் அருண், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, சென்னை மண்டல கள விளம்பர பிரிவின் இயக்குனர் காமராஜ், சென்னை மண்டல செய்தி மற்றும் கள விளம்பர பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, புதுச்சேரி சுகாதாரத் துறையின் இயக்குனர் ஸ்ரீராமுலு, கள விளம்பர பிரிவின் துணை இயக்குனர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவை எதிர்கொள்வதில் தடுப்பூசி முக்கியமான ஒன்றாகும். அதனை மக்களிடம் சேர்க்க அரசு சார்பில் தடுப்பூசி திருவிழாக்கள், பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக 41 கிராமங்களில் முழுமையான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். சிலர் தடுப்பூசி போட தயங்குகின்றனர்.

100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக புதுச்சேரி மாற இந்த விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் உறுதுணையாக இருக்கும். பள்ளிகள் விரைவில் திறக்கப்பட இருப்பதால் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் யாராவது ஒருவர் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்கள் மூலம் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கவும், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தவும், கொரோனாவை எதிர்கொள்ளவும் சுகாதார துறைக்கு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். மத்திய அரசு புதுவைக்கு சுமார் ரூ.700 கோடிக்கு அதிகமாக சலுகைகள் வழங்கியுள்ளது.

பட்ஜெட் எல்லாவிதத்திலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இந்த திட்டங்கள் அனைத்தும் செம்மையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வளர்ச்சி கண்ட புதுவையாக மாறும். அதற்கு அனைத்து வகையிலும் அரசுக்கு கவர்னர் என்ற முறையில் நான் உறுதியாக இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News