செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்

சிவகாசியில் 34 டன் ரேசன் அரிசியுடன் லாரி பறிமுதல்

Published On 2021-08-20 11:26 IST   |   Update On 2021-08-20 11:26:00 IST
ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் சதீஷ்குமார், லாரி உரிமையாளர் முத்தையா ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மீனம்பட்டி ரோட்டில் ஒதுக்குப்புறமான இடத்தில் குடோன் உள்ளது. இந்த குடோன் முன்பு சந்தேகத்திற்கு இடமாக லாரி நின்று கொண்டிருந்தது.

அந்த லாரியில் “அத்தியாவசிய பொருட்கள் அவசரம்“ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அடிக்கடி இந்த லாரி குடோன் முன்பு சென்றதால் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து சப்-கலெக்டர் பிருத்விராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாண்டி மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது லாரியில் 34 டன் ரேசன் அரிசி மற்றும் 2 மூட்டைகளில் 200 கிலோ கோதுமை இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரேசன் அரிசி மூட்டைகளுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாண்டி விருதுநகர் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் அய்யனார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்போது அவர், சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் குடோனை விலைக்கு வாங்கியதாகவும், பின்னர் தொழில் சரியாக நடத்த முடியாததால் குடோனை பூட்டியதாகவும் தெரிவித்தார்.

மேலும் தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு மாதம் ரூ.15 ஆயிரத்துக்கு குடோனை வாடகைக்கு விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் சதீஷ்குமார் மற்றும் சிவகாசியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் முத்தையா ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

லாரியை பறிமுதல் செய்தபோது, அதில் 199 காலி அரிசி சாக்குகள் இருந்தது. இதனால் ரேசன் கடை ஊழியர்களுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.




Similar News