செய்திகள்
ஓசூர் அருகே மின்விளக்குகளால் ஜொலிக்கும் சாமந்தி பூ தோட்டம் - பொதுமக்கள் வியப்பு
ஓசூர் அருகே இரவில் மின்விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கும் சாமந்தி பூ தோட்டத்தை பொதுமக்கள் வியப்புடன் கண்டு, ரசித்து செல்கின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள மத்தம் அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ரோஜா, செண்டுமல்லி, சாமந்தி போன்றவற்றை சாகுபடி செய்து வருகிறார். அவர் கொல்கத்தாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ்வர்யா-2 என்ற சாமந்தி பூ செடிகளை வாங்கி வந்து தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ளார். இந்த ஐஸ்வர்யா-2 சாமந்தி பூ நடவு செய்த 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிறது. இந்த பூக்களுக்கு மலர் சந்தைகளில் நல்ல விலை கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
மலர் செடிகளுக்கு பகல் நேர வெளிச்சம் மட்டுமே அதன் வளர்ச்சிக்கு போதுமானது. ஆனால் ஐஸ்வர்யா-2 சாமந்தி பூ செடிக்கு பகலிலும், இரவிலும் வெளிச்சம் தேவைப்படுகிறது. அப்போதுதான் செடிகள் நல்ல வளர்ச்சியை பெறும் என கூறப்படுகிறது. இதனால் இந்த பூச்செடிகளை நடவு செய்துள்ள விவசாயி தனது ஐஸ்வர்யா-2 சாமந்தி பூ தோட்டத்தை இரவிலும் மின் விளக்குகளை ஒளிரவிட்டு ஜொலிக்க செய்துள்ளார்.
இதற்காக தன்னுடைய 75 சென்ட் விவசாய தோட்டத்தில் 160 எல்.இ.டி. விளக்குகளை பொருத்தியுள்ளார். அதேபோல மற்றொரு ஒரு ஏக்கர் மலர் தோட்டத்தில் 150 விளக்குகளை எரிய விட்டுள்ளார். இரவு முழுவதும் ஜொலிக்கும் இந்த விளக்குகளின் ஒளியில் இருந்து மலர் செடிகள் ஒளியை பெறுகின்றன. இரவு நேரத்தில் மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஐஸ்வர்யா-2 சாமந்திப்பூ தோட்டத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்து செல்கின்றனர். இரவு நேரத்தில் இந்த விவசாய தோட்டம் அனைவரது பார்வையையும் கவர்ந்து வருகிறது.
இதுகுறித்து விவசாயி சேகர் கூறுகையில், இந்த சாமந்தி பூ தோட்டத்திற்கு மின்சார கட்டணம் மற்றும் பாதுகாப்பு செலவுகள் அதிக அளவில் வருகிறது. இந்த பூக்கள் பூக்க தொடங்கியதும் வாரம் ஒரு முறை என 6 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம் என்றார்.