செய்திகள்
கொரோனா வைரஸ்

சீர்காழி பகுதி காட்டுயிர் ஆய்வாளர் கொரோனா தொற்றுக்கு பலி

Published On 2021-06-02 15:41 IST   |   Update On 2021-06-02 15:41:00 IST
சீர்காழி பகுதி காட்டுயிர் ஆய்வாளர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சீர்காழி:

சீர்காழி அடுத்த திட்டை பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது43). இவர் இந்திய வன உயிரின அறக்கட்டளையின் முன்னணி ஆய்வாளர். டபிள்யு.டி.ஐ நிறுவனமும் இந்திய அரசின் யானைகள் திட்டமும் (பிராஜக்ட் எலிபேன்ட்) இணைந்து இந்தியா முழுவதும் உள்ள யானைகளின், வலசைப் பாதைகளை கண்டறிந்து ஆவணப்படுத்திய பணியில் முக்கிய பங்காற்றியவர்.

அதுவே ரைட் ஆப் பேசஜ் எனும் ஆவண நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூலில் இடம்பெற்றுள்ள 108 வலசை பாதைகளின் வரைபடங்களையும் ஆவணப்படுத்தியதில் ராம்குமாரின் பங்களிப்பு உள்ளது.

ஏவிசி கல்லூரியில் வன உயிரின அறிவியலில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். கோவை வனக் கோட்டத்தின் நில அமைப்பு, யானைகளின் வாழ்விடம், வலசை பாதைகள், யானை மனிதன் முரண்பாடு ஆகியவை உள்ளடக்கிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். ஜி.ஐ.எஸ். எனப்படும் நவீன தொழில்நுட்பத்தை கையாள்வதில் வல்லமை கொண்டவர்.

இந்திய வன உயிரின அறக்கட்டளை, இந்தியாவில் உள்ள யானைகளின் வலசை பாதைகளை காப்பாற்றுவதில் பெரும் பணியாற்றுகிறது. தனியார் வசமுள்ள, சில வலசைப் பாதைகளை விலை கொடுத்து வாங்கி அதனை யானைகளுக்காக மீட்டுக்கொடுக்கும் பணியை அவ்வமைப்பினர் செய்து வருகின்றனர்.

அவ்வாறு கேரளாவின் வயநாடு பகுதியிலும் கர்நாடகாவிலும் சில வலசைப் பாதைகள் மீட்டெடுக்கப்பட்டன. அந்த பாதைகளை மீட்டெடுப்பதில் ராம்குமார் பங்களிப்பு மிக முக்கியமானது.

பல ஆய்வு பணிகளில் ஈடுப்பட்டு வந்த ராம்குமார் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கும்பகோணத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவு, 2 குழந்தைகள் உள்ளனர்.

Similar News