செய்திகள்
குடிநீர் கேட்டு வாழ்மங்கலம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

திருமருகல் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2021-04-22 12:39 GMT   |   Update On 2021-04-22 12:39 GMT
நாகை மாவட்டம் திருமருகல் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள அகரக்கொந்தை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வசதி செய்து தரக் கோரியும் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் காரைக்கால்-நன்னிலம் சாலையில் வாழ்மங்கலம் பஸ் நிலையம் எதிரில் அமர்ந்து குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் காரைக்கால்-நன்னிலம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News