செய்திகள்
கைது

சென்னை விமானநிலையத்தில் லிபியா நாட்டுக்கு தடையை மீறி சென்று வந்தவர் கைது

Published On 2021-04-20 09:55 GMT   |   Update On 2021-04-20 09:55 GMT
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதைப்போல் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பெரம்பலூர் பயணி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலந்தூர:

கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் நேற்று இரவு வந்தது.

அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமது சமீம் என்பவர் லிபியா நாட்டிலிருந்து இஸ்தான்புல் வந்து அங்கிருந்து கத்தார் வழியாக சென்னைக்கு வந்திருப்பது தெரிந்தது.

லிபியா நாடு இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்ற பட்டியலில் உள்ளது.எனவே இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு நலன் கருதி இந்தியர்கள் யாரும் லிபியா நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று தடைவிதித்துள்ளது.

இந்த தடையை மீறி, முகமது சமீம் லிபியா நாட்டிற்கு சென்றுவந்ததால் அவரை வெளியே அனுப்பாமல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது முகமது சமீம், தான் பிரபலமான ஒரு மருந்து கம்பெனியில் பார்மசிஸ்டாக பணியாற்றி வருவதாகவும், அந்த கம்பெனி பணி நிமித்தமாக கடந்த 2019-ம் ஆண்டில் லிபியாவிவுக்கு அனுப்பி வைத்தது. முறையான ஆவணங்களுடன் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இணைப்பு விமானங்கள் மூலம் லிபியா சென்று அங்கு 2 ஆண்டுகள் பணியில் இருந்தேன். அப்போது லிபியா தடை செய்யப்பட்ட நாடு என்று என்னிடம் கூற வில்லை என்றும் கூறினார்.

ஆனால் சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அரசால் பாதுகாப்பு இல்லாத நாடு என்று தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்றதாக முகமது சமீம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதைப்போல் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பெரம்பலூர் பயணி ஒருவர் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News