செய்திகள்
மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், ‘மெப்ஸ்’ மேம்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்

Published On 2021-04-17 03:07 GMT   |   Update On 2021-04-17 03:07 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜான்லூயிஸ் தெரிவித்தார்.
தாம்பரம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ‘மெப்ஸ்’ வளாகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

முகாமை செங்கல்பட்டு மாவட்ட கொரோனா கண்காணிப்பு சிறப்பு அலுவலர் சமயமூர்த்தி, மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், ‘மெப்ஸ்’ மேம்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் நிருபர்களிடம் சமயமூர்த்தி கூறும்போது, “செங்கல்பட்டு மாவட்டத்தில் 142 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், தடுப்பூசி போடுதல் போன்றவை மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும்” என்றார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கூறியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். மாவட்டத்தில் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி இருப்பு உள்ளது. மக்களே முன் வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News