செய்திகள்
பல்லாவரத்தில் பட்டப்பகலில் கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையன்

பல்லாவரத்தில் பட்டப்பகலில் கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையன்

Published On 2021-04-12 08:37 IST   |   Update On 2021-04-12 08:37:00 IST
பல்லாவரத்தில் கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையனை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகரைச் சேர்ந்தவர் கீதா (வயது 24). தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள இவர், தனது வீட்டின் வாசலில் உள்ள பிள்ளையார் சிலை முன்பு நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரை கண்டதும் இருசக்கர வாகனத்தை திருப்பினர். ஒருவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருக்க, பின்னால் அமர்ந்து இருந்தவர் கீழே இறங்கி வந்து கீதா கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றான்.

இதனால் சுதாரித்துக்கொண்ட கீதா, கொள்ளையனிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது சாலையோரம் தவறி விழுந்தார். உடனே கொள்ளையன் அவர் கழுத்தில் கிடந்த சங்கிலியை பிடித்து இழுத்தான். ஆனால் கீதா, சங்கிலியை கையால் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டப்படி கொள்ளையனிடம் போராடினார்.

ஆனாலும் கொள்ளையன் கீதாவை தரதரவென சாலையில் இழுத்து வந்து சங்கிலியை பறிக்க முயன்றான். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், இதனை வேடிக்கை பார்த்தனர். யாரும் கொள்ளையனை தடுக்க முயற்சி செய்யவில்லை. இதற்கிடையில் அக்கம் பக்கத்தினர் சிலர் ஓடிவந்ததால் சங்கிலியை பறிக்க முடியாமல் கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். இதனால் 11 பவுன் தாலி சங்கிலி தப்பியது. கொள்ளையனிடம் போராடியதில் கீதாவுக்கு கை, காலில் லேசான காயங்கள் ஏற்பட்டது.

இதுபற்றி பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

Similar News