செய்திகள்
மணல் அள்ளப்பட்ட குண்டாற்றுபடுகை.

விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் தொடரும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை தேவை - கலெக்டருக்கு கோரிக்கை

Published On 2021-04-10 13:20 GMT   |   Update On 2021-04-10 13:20 GMT
மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் குண்டாற்று படுகையில் நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் தொடரும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குண்டாற்று படுகையில் மணல் திருடப்படுவதாக ஏற்கனவே பல பொதுநல வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு இதனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட நீதிபதியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு அதனை தொடர்ந்து மேலும் ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனை ஐகோர்ட்டு நியமித்தது.

இதனைத்தொடர்ந்து குண்டாற்று படுகையில் மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனாலும் மாவட்டத்தின் கிழக்கு பகுதியிலுள்ள கிராமங்களில் குண்டாற்று படுகையில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெறுகிறது. ஏற்கனவே திருச்சுழி பகுதியில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டதால் அப்பகுதியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கிழவநேரி புதுப்பட்டி கிராமங்களில் எந்திரங்கள் மூலம் ஏராளமான லாரிகளில் அனுமதியில்லாமல் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதேபோல குண்டாற்றுபடுகையில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. ஆனால் இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் கிழவநேரி மற்றும் புதுப்பட்டி கிராமங்களில் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News