நரிக்குடி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பணக்குடியைச் சேர்ந்தவர் அழகுமுத்து. இவரது மனைவி சரண்யா (வயது 24). இவர்களுக்கு 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர்.
அழகுமுத்து சரியாக வேலைக்கு செல்லாததால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா, கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் சங்குவள்ளி வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் அங்கு சரண்யாவும், அவரது மகனும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சங்குவள்ளி, மகள் மற்றும் பேரனை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக இறந்தார். 4 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்த சரண்யா பாட்டிலை கீழே வீசி இருக்கலாம். அதனை எடுத்து சிறுவன் குடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு சரண்யா குடித்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.