செய்திகள்
கோப்பு படம்.

ராஜபாளையம் அருகே கழுத்தை அறுத்த நிலையில் பிணமாக கிடந்தவர் யார்? போலீசார் விசாரணை

Published On 2021-04-08 10:42 GMT   |   Update On 2021-04-08 10:42 GMT
ராஜபாளையம் அருகே கிணற்றில் 42 வயது மதிக்கத்தக்க நபர் கழுத்தை அறுத்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறத்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர்ராஜபுரம் காட்டுப்பகுதியில் உள்ள கிணற்றில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ராஜபாளையம் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது கிணற்றில் வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த உடலை கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர். முகம் சிதைந்திருந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. 42 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் கழுத்து அறுக்கப்பட்ட தடயங்களும், மேலும் உடல் முழுவதும் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களும் காணப்பட்டன.

தொடர்ந்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவரை மர்ம கும்பல் கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து பின்னர் உடலை கிணற்றில் வீசி இருக்கலாம் என தெரிகிறது.

இந்த சம்பவம் ஒரு வாரத்துக்கு முன்பு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உடல் மிகவும் அழுகிய நிலையிலும், முகம் சிதைந்த நிலையிலும் இருப்பதால் இறந்தவர் யார்? என்று உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் காவேரிமணியம் (வயது 42). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். சில காரணங்களால் சஸ்பெண்டு செய்யப்பட்டதால் காவேரி மணியம் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். ராஜபாளையம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடியதாக காவேரிமணியம் மீது வழக்கு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக அவர் வீட்டுக்கு வரவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அவரை கண்டு பிடித்து தருமாறு காவேரி மணியத்தின் மனைவி ராதா சேத்தூர் போலீசில் நேற்று புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் பிணமாக கிடந்தவர் ஒருவேளை காவேரிமணியாக இருக்கலாமோ? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவில்தான் அவர்தான் இவரா? என்பது தெரியவரும். இருந்தபோதிலும் மாயமான போலீஸ்காரரை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News