செய்திகள்
விருதுநகரில் திறந்தவெளி கழிப்பிடமாக மாறிய நாடகக் கொட்டகை சந்து.

விருதுநகரில் பிரதான சாலை, திறந்தவெளி கழிப்பிடமான அவலம்- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Published On 2021-04-01 19:53 IST   |   Update On 2021-04-01 19:53:00 IST
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விருதுநகரில் பிரதான பகுதியில் உள்ள சாலை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்பட்டு வரும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்:

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை அனைத்து பகுதிகளிலும் நோய்தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உள்ளாட்சி துறையினர், சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விருதுநகரில் பிரதான சாலையான ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள நாடகக்கொட்டகை சந்தில் சமீபத்தில் தான் ரூ.6 லட்சம் செலவில் சிமெண்டு கற்கள் பதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பணிக்காக சாலை சேதப்படுத்தப்பட்டது. ஆனால் சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட வில்லை.

இதனை தொடர்ந்து அந்த சாலை முற்றிலுமாக திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையில் அதில் வசிப்போர் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து உடனடியாக அப்பகுதியில் சாலை சீரமைப்பு பணி மேற்கொண்டு திறந்தவெளி கழிப்பிடமாக இருப்பதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத சுகாதார அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

Similar News