செய்திகள்
உடையார்பாளையம், ஆண்டிமடம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கடைவீதி, புறவழிச்சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
உடையார்பாளையம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கடைவீதி, புறவழிச்சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ்சந்தரபோஸ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ், செல்வகாந்தி ஆகியோர் அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்தவர்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் மொத்தம் ரூ.7 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இதேபோல் ஆண்டிமடம் அருகே மேலநெடுவாய் கிராம பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் காங்குழி, அய்யூர், வல்லம் மற்றும் குவாகம் கிராமங்களில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள், வியாபார நிறுவனங்களில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்தவர்கள் என 11 பேருக்கு தலா 200 அபராதம் விதித்தனர். இதில் மொத்தம் ரூ.2,200 வசூல் செய்யப்பட்டது. இது பற்றி மருத்துவ அலுவலர் கண்ணன் கூறுகையில், பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கிருமி நாசினி பயன்படுத்தி நோய் பரவலை தடுக்க வேண்டும், என்றார். ஆய்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குழந்தைவேல், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் நாட்டு துரை, சுகாதார ஆய்வாளர் உமாபதி மற்றும் சுகாதாரக்குழுவினர் கலந்து கொண்டனர்.