செய்திகள்
காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடிவிபத்து

சிவகாசி அருகே வெடிவிபத்தில் 5 பேர் பலி- பட்டாசு ஆலை அதிபர் சரண்

Published On 2021-02-26 08:59 GMT   |   Update On 2021-02-26 08:59 GMT
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலியாகினர். பட்டாசு ஆலை அதிபர் தங்கராஜ் பாண்டியன் எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கராஜ் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு காளையார்குறிச்சி, திருத்தங்கல், சிவகாசி, எல்லிங்க நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 120 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆலை வளாகத்தில் உள்ள புற்களை டிராக்டர் மூலம் வெட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன.

விபத்து ஏற்பட்ட பகுதியில் மருந்து இருப்பு வைக்கும் அறை இருந்ததால் அந்த அறைக்கும் தீ பரவியது. இந்த வெடிவிபத்தில் 15-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் பல அறைகள் சேதம் அடைந்தது.

இதில் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அறைகள் வெடித்து சிதறி கொண்டே இருந்ததால் மீட்பு பணிகள் தாமதமானது.

இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே எல்லிங்காநாயக்கன்பட்டியை சேர்ந்த வீரராஜ் மனைவி செல்வி (வயது37), அழகர்சாமி மனைவி லட்சுமி (50), காளையார்குறிச்சியை சேர்ந்த செல்லையா மனைவி ஜோதி (55), ரத்தினசாமி மனைவி சந்திரா (48) ஆகிய 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.

மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் காளையார்குறிச்சியைச் சேர்ந்த பொன்னுச்சாமி (74) என்ற தொழிலாளி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

பிரபாகரன் என்ற தொழிலாளி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2 பேர் 80 சதவீதத்துக்கும் மேல் உடல் கருகியதால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவம் பற்றி அறிந்ததும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள சுப்பிரமணியம் ஆகியோர் விபத்து நடந்த ஆலைக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விபத்து நடந்த பகுதியில் இரவிலும் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. தீயணைப்பு படையினர், போலீசார், தன்னார்வலர்கள், உள்ளூர் இளைஞர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பட்டாசு ஆலை அதிபர் தங்கராஜ் பாண்டியன் எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விக்னேசுவரன் மற்றும் போர்மேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 23 பேர் இறந்தனர். பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சோக சம்பவம் அடங்குவதற்குள் விருதுநகர் மாவட்டத்தில் மற்றொரு பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வெடி விபத்தில் காளையார்குறிச்சியைச் சேர்ந்த ஜோதி, சந்திரா மற்றும் பொன்னுச்சாமி ஆகிய 3 பேர் பலியாகி உள்ளனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 5 பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News