செய்திகள்
சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும் - அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேச்சு
சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்று அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் சிவகாசி கல்லூரி நிகழ்ச்சியில் பேசினார்.
சிவகாசி:
சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியில் வேதியியல் துறை மற்றும் தகவல்வள மையம் சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது.
கல்லூரியின் நூலகர் யாஸ்மின் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் பழனீஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நீண்ட விடுமுறைக்கு பின்னர் தற்போது கல்லூரிக்கு வந்து இருக்கிறீர்கள்.
கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள். கற்பதும், கேட்பதும், பார்ப்பதும், பகிர்வதும் முக்கியம்.
பிரச்சினைகளை மாணவ, மாணவிகள் போராடி வெற்றி கொள்ள வேண்டும். முடியும் என்று சொல்பவரால் தான் வரலாறு படைக்க முடியும். நம்பிக்கை தருபவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நம்பினால் தான் பார்க்க முடியும் என்பது விஞ்ஞான அறிவு. அறிவை தேடி, தேடி செல்ல வேண்டும்.
அப்போது வெற்றி எளிதாகும். செவ்வாய் கிரகத்தில் இறங்கிய 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா விரைவில் பெறும்.
இங்கு படிக்கும் அறிவியல் துறை மாணவிகளுக்கு நிறைய பணிகள் இருக்கிறது. தமிழகத்தில் 30 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதாக கூறப்படு கிறது. பெண் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் அவர்களை வேலைக்கு அனுப்ப தயங்கும் நிலை தொடர்கிறது. இந்த நிலை மாற வேண்டும். ஆணும், பெண்ணும் சமம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
இன்னும் 30 வருடத்தில் இந்தியாவில் நிலக்கிரி, எண்ணெய் வளம் இருக்காது. இதற்கு மாற்று பொருளை நாம் கண்டறிய வேண்டும்.
2030-க்குள் நாம் எரிசக்திதுறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். சரியான தலைவனை தேர்வு செய்ய வேண்டும். அப்போது நாட்டில் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசியலிலும், சமூகத்திலும் மாற்றத்தை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை தலைவர் சவுதாமணி, நூலகர் யாஸ்மின் ஆகியோர் செய்திருந்தனர்.