செய்திகள்
பாகூரில் இருந்து செல்லும் தனியார் பஸ்சில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் மாணவர்களை படத்தில் காணலாம்.

பஸ் மேற்கூரையில் மாணவர்கள் ஆபத்தான பயணம்- சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை

Published On 2021-02-11 15:13 GMT   |   Update On 2021-02-11 15:13 GMT
பஸ் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க சிறப்பு பஸ் விட கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாகூர்:

புதுச்சேரியில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 9 மாதங்களுக்கு பிறகு புதுவையில் கடந்த ஜனவரி 4-ந் தேதி முதல் அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

1, 3, 5, 7, 9, 11 ஆகிய வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளிலும், 2, 4, 6, 8, 10, 12 ஆகிய வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனி கிழமைகளிலும் நடக்கிறது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டும் வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் அரசு பள்ளிகள் மதியம் 12.30 மணி வரை நடை பெறுவதால் மதிய உணவு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ- மாணவர்களுக்கு ஒரு ரூபாய் சிறப்பு பஸ் சேவையும் இல்லை. இதனால் தனியார் பஸ்களையே மாணவர்கள் நம்பியுள்ளனர்.

பள்ளிக்கூடம் மதியம் 12.30 மணிக்கு முடிவதால் பள்ளி மாணவ- மாணவிகள் தனியார் பஸ் மூலம் வீடு திரும்பி வருகின்றனர். கிராமப்புறங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்கள் வருவதால் அதை தவற விட்டால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

எனவே பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், நெருக்கியடித்துக்கொண்டு மாணவ- மாணவிகள் பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் பஸ்சில் ஏற முடியாத அளவிற்கு கூட்டம் இருப்பதால் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதை பாா்த்து மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர்.

கிராமப்புற மாணவ-மாணவிகளின் உயிரோடு விளையாடும் அரசு உடனே இதனை கவனத்தில் கொண்டு மாணவர் சிறப்பு பஸ்சை இயக்கவேண்டும். பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News