செய்திகள்
தர்மபுரியில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

தர்மபுரியில் அரசு ஊழியர்கள் தொடர் மறியல் போராட்டம் - 56 பேர் கைது

Published On 2021-02-11 15:59 IST   |   Update On 2021-02-11 15:59:00 IST
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 9-வது நாளாக தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 56 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:

அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 9-வது நாளாக தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட பொருளாளர் புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்த ஊதியம் ஆகியவற்றை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஊதிய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட45 பெண் ஊழியர்கள் உள்பட 56 அரசு ஊழியர்களை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.

Similar News