செய்திகள்
ஹெல்மெட் அணிய சொல்வது ஏன்?- கவர்னர் விளக்கம்
ஹெல்மெட் அணிய சொல்வது ஏன்? என்பதற்கு கவர்னர் கிரண்பேடி விளக்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும் நடந்தன. கவர்னரை சந்தித்து அபராதம் வசூலிக்கக் கூடாது என பா.ஜ.க.வினரும் வலியுறுத்தினர். இந்தநிலையில் அபராதம் வசூலிக்க தடை விதித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
நாராயணசாமியின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்று கவர்னர் கிரண்பேடி குற்றஞ்சாட்டினார். தற்போது போலீசார் ஹெல்மெட் அணிவது தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஹெல்மெட் அணிய சொல்வது ஏன்? என்பது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஹெல்மெட் அணியவேண்டும் என்று நான் திரும்ப திரும்ப சொல்வதில் காரணம் இருக்கிறது. எனக்கு 6 வயதாக இருக்கும்போது ஸ்கூட்டரில் சென்ற எனது தந்தை விபத்தில் சிக்கினார்.
அவர் ஹெல்மெட் அணியாததால் தலையில் காயம்பட்டு பல நாட்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனது தாயார் என்னையும், எனது சகோதரிகளையும் பார்த்து உங்கள் தந்தை இந்த இரவினை தாண்டிவிட்டால் மறுநாள் பாதுகாப்பானது என்று கூறினார். அப்போது நாங்கள் அடைந்த துயரம் அளவில்லாதது.
ஹெல்மெட் அணியாதவர்கள் விபத்தில் சிக்கும்போது அவரது குடும்பத்தினரும், அவர்களை சார்ந்தவர்களும் கடும் துயரம் அடைகின்றனர். எனவே தயவு செய்து ஹெல்மெட் அணியுங்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.