செய்திகள்
சின்ன வெங்காயம்

ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு

Published On 2021-02-03 15:17 GMT   |   Update On 2021-02-03 15:17 GMT
ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.
ஈரோடு:

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் திடீரென கிடுகிடுவென உயர்ந்தது. அப்போது ஈரோட்டில் சின்ன வெங்காயம் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து வெங்காயத்தின் வரத்து அதிகரிக்க தொடங்கியதும், விலை குறைந்தது. கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் சுமார் ரூ.45க்கு விற்பனையானது.

இந்தநிலையில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர தொடங்கி இருப்பது, இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரத்தை காட்டிலும், இந்த வாரம் சின்ன வெங்காயத்தின் விலை இரு மடங்கு உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பெரிய வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50 வரை உயர்ந்து உள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்துவிட்டது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும் சுமார் 150 டன் வெங்காயம் வரத்து இருந்து வந்தது. அதில் பாதி அளவு மட்டுமே தற்போது வருகிறது. மீண்டும் வெங்காயத்தின் வரத்து அதிகமானால் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது”,என்றனர்.
Tags:    

Similar News