செய்திகள்
கோப்புபடம்

பதுக்கி மது விற்ற வாலிபர்களை மடக்கிப்பிடித்த பழங்குடியின சிங்கப்பெண்கள் - போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

Published On 2021-02-02 19:20 IST   |   Update On 2021-02-02 19:20:00 IST
ஊட்டி அருகே பதுக்கி மது விற்ற வாலிபர்களை மடக்கிப்பிடித்த பழங்குடியின சிங்கப்பெண்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோத்தர் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமம் கோக்கால். இங்கு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டது. இங்கு மது குடித்த பலர் வேலைக்கு செல்லாமல் போதையிலேயே சுற்றித்திரிந்தனர். இதனால் வருமானம் இன்றி குடும்பங்களில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கிராமம் முழுவதும் நிம்மதியின்றி தவித்தனர்.

இதனையடுத்து குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். கடும் போராட்டத்துக்கு பின்னர் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. மதுக்குடிக்க போதிய வாய்ப்பு இல்லாததால் நிற்காமல் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தனர். இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில் கிராமத்துக்கு வெளியே சிலர் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு சில்லிங் முறையில் விற்பனை செய்தனர். இதனால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய கிராம ஆண்கள் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்தனர்.

இதனையடுத்து மதுவிற்கும் வாலிபர்களை பிடிக்க பழங்குடியின பெண்கள் ஒன்று சேர்ந்தனர்.

நேற்று கூட்டமாக சென்ற பெண்கள் மதுவிற்ற 10-க்கும் மேற்பட்ட வாலிபர்களை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு மது விற்ற வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பெண்களின் இந்த செயலுக்கு போலீஸ் சூப்பிண்டு பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து அந்த பகுதி பெண்கள் கூறும்போது,

சட்டவிரோத மதுவிற்பனை குறித்து உள்ளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மதுவே எங்கள் கிராமத்துக்குள் வரக்கூடாது என்று தீர்மானித்த நாங்கள் ஒன்று சேர்ந்து சில்லிங் முறையில் மதுவிற்ற வாலிபர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தோம். இதையும் மீறி இங்கு மது விற்றால் தொடர்ந்து தடுப்போம் என்றனர்.

கிராம பெண்களின் இந்த துணிச்சல் மிக்க செயல் சிங்கப்பெண்களை நினைவுபடுத்தியதாக சமூக ஆர்வலர்கள் கூறினர். 

Similar News