செய்திகள்
ஆட்டோவில் தவறவிட்ட 50 சவரன் நகை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார்.

ஆட்டோவில் பயணி தவறவிட்ட 50 பவுன் நகையை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த டிரைவர்

Published On 2021-01-29 02:27 IST   |   Update On 2021-01-29 02:27:00 IST
ஆட்டோவில் பயணி தவறவிட்ட 50 பவுன் நகையை நேர்மையாக ஒப்பட்டைத்த ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது.
தாம்பரம்:

குரோம்பேட்டையை சேர்ந்தவர் பால் பிரைட். வியாபாரிகள் சங்க பிரமுகரான இவருடைய மகன் திருமணம் நேற்று முன்தினம் அங்குள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. பின்னர் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில், தேவாலயத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் சென்றுள்ளார்.

அப்போது தன்னுடைய பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை ஆட்டோவில் தவறவிட்டுவிட்டார். இதையடுத்து, வீட்டில் சென்று பார்த்தபோது, தன்னுடையை நகைப்பையை ஆட்டோவில் தவறவிட்டது உணர்ந்தார். இதைத்தொடர்ந்து பால் பிரைட், குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார், நகையை தவறவிட்ட ஆட்டோவை தேடி வந்தனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் ஆட்டோ டிரைவர் சரவணகுமார், ஆட்டோவில் தவறவிட்ட நகைப்பையை எடுத்து கொண்டு குரோம்பேட்டை போலீஸ் நிலையம் வந்தார். பின்னர் நடந்தவற்றை கூறி நகையை போலீஸ்காரர்களிடம் ஒப்படைத்தார்.

50 பவுன் நகையை நேர்மையாக ஒப்பட்டைத்த ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை குரோம்பேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் பாராட்டி வெகுமதி அளித்தனர்.

Similar News