ஒரே கல்லில் வடிக்கப்பட்ட 15 டன் விநாயகர் சிலை மும்பை கொண்டு செல்லப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சிற்ப கலை கூடத்தில் மும்பையில் உள்ள ஜீவ்தானி மந்திர் கோவிலில் உள்ள கருவறையில் நிறுவுவதற்காக 10 அடி உயரத்தில் விநாயகர் சிலை வடிவமைத்து தரும்படி கேட்கப்பட்டது.
15 டன் எடையுள்ள ஒரே கல்லில் 10 அடி உயரத்தில் மூசிக (எலி) வாகனம் தாங்கிய ஆதார பீடத்துடன், அமர்ந்த திருக்கோலத்தில் 6 அடி அகலத்தில் 4 கரங்களில் பாசம், அங்குஷம், லட்டு, அபயம் தாங்கிய திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில் சைவ ஆகம முறைப்படி வலம்புரி விநாயகர் சிலையை 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த 2 மாதங்களாக வடிவமைத்தனர்.
பளபளப்புடன் பாலிஷ் போடப்பட்டு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு முழுவதும் வடிவமைக்கப்பட்ட பிறகு கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தப்பட்ட இந்த சிலையை சிற்பிகள் சாலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த சிலைக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்து கன்டெய்னர் லாரியில் கிரேன் மூலம் தூக்கி வைத்து அனுப்பி வைத்தனர்.
இந்த சிலைக்கு மும்பையில் உள்ள கோவிலில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடத்தி கருவறையில் வைக்க உள்ளதாக சிற்பிகள் தெரிவித்தனர்.