மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி வத்திராயிருப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பதிவு: ஜனவரி 21, 2021 21:17
கோப்புபடம்
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.
இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்தனர். எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நேற்று வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, நெற்கதிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் விஜய முருகன், விவசாய சங்க தாலுகா செயலாளர் மணிக்குமார் மற்றும் ராஜ்குமார், முத்துராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.